|
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) உள்ளம் உடைந்து உக்கக்கால்- காதலி நம் பிரிவையாற்றாது உள்ள முடைந்து இறந்து பட்டபின்; பெறின் என் ஆம்- நம்மைத் தப்பாது பெறக்கூடிய நிலைமைய ளானால்தான் என்ன பயன்? பெற்றக்கால் என் ஆம்- அதற்குமேல், உண்மையில் நம்மைப் பெற்றாலுந்தான் என்ன பயன்? உறின் என் ஆம்- இனி, அதற்கும் மேல், நம்மொடு உடம்பொன்றிக் கலந்தாலுந்தான் என்ன பயன்? இவையொன்றாலும் ஒரு பயனுமில்லையே! அதற்குமுன் யான் விரைந்து செல்லவேண்டுமென்பது கருத்தாதலின், விதும்பலாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை யறிக. என்னும் பரிமேலழகர் மறுப்புப் பொருத்தமானதே. 'ஆம்' ஆகும் என்பதன் தொகுத்தல்.
|
|
கலைஞர் உரை:
|
|
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என்னுடைய ஏக்கத்தால் என் மனைவி மனமுடைந்தவளாகி அவளுக்கு ஏதேனும் கெடுதி உண்டாகிவிட்டால், நான் வந்த காரியத்தில் வெற்றி பெற்றுத்தான் என்ன பயன்? அதற்காக மன்னனிடம் பரிசும் பணமும் பெற்றுவிட்டால்தான் என்ன பயன்? அந்தச் செல்வங்களுடன் மனைவியிடம் போய்த்தான் என்ன பயன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலி நம் பிரிவினைப்பொறுக்க முடியாமல் இறந்துவிட்டால் நம்மைப் பெற்றால் என்ன? அதுவன்றிநம்மைப் பெற்றதனால்தான் என்ன?. மேலும் மெய்யுறக் கலந்தால்தான் என்ன? இவையொன்றினாலும் பயனில்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து போன பின், காதலரைக் கண்டு ஆவதென்ன, கண்ட பிறகு ஆவதென்ன, கலந்தால்தான் ஆவதென்ன?
|
|
Translation
|
|
What's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?.
|
|
Explanation
|
|
After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?.
|
|
Transliteration
|
|
Perinennaam Petrakkaal Ennaam Urinennaam
Ullam Utaindhukkak Kaal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|