Thirukural

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு- நெடுந்தொலைவு சென்ற தம் காதலர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை மனத்துட்கொண்டு, அது வருமளவும் ஏக்கம் பிடித்து வருந்தும் மகளிர்க்கு; ஒருநாள் எழு நாள் போல் செல்லும்- ஒரு நாளே பலநாள் போல் நெடிதாகத் தோன்றும். ஏழு என்னும் நிறைவெண் இங்குக் கழிபன்மை யுணர்த்தி நின்றது. முன்பு தலைமகள் பட்டறிவையறிந்த தலைமகன் அதைப் பொதுப்படுத்திக் கூறியவாறு. இருநாளென்று பாடமோதுவாரும் இருந்தமை பரிமேலழக ருரையால் தெரியவருகின்றது.
கலைஞர் உரை:
நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தூரதேசம் போயிருக்கிற கணவன் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மனைவிக்கு ஒரு நாள் போவது ஏழு நாட்கள் போல இருக்கும்.(அதனால் நான் விரைந்து போகவேண்டும்.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தூர தேயத்திற்குச் சென்றிருக்கும் காதலரை எண்ணி வருந்தியிருக்கும் மகளிர்க்கு ஒருநாள் பல நாட்களாக நெடிதாகக் கழியும்.
தமிழ்க்குழவி உரை:
என்னைப் பிரிந்து சென்ற காதலரை எண்ணித் தவிக்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு ஏழு நாட்கள் போல நெடிதாகத் தோன்றுகிறது.
Translation
One day will seem like seven to those who watch and yearn For that glad day when wanderers from afar return.
Explanation
To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
Transliteration
Orunaal Ezhunaalpol Sellumsen Sendraar Varunaalvaiththu Engu Pavarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1269