Thirukural

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. (கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.)
மணக்குடவர் உரை:
காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(நாணு நிறையு மழியாமை நீ யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) நாணுத் தாழ் வீழ்த்த நிறையென்னுங் கதவு- நாணாகிய தாழிட்டுப் பூட்டிய நிறையென்னுங் கதவை; காமக் கணிச்சி உடைக்கும் - காமவேட்கையாகிய கோடரி வெட்டிப் பிளக்கும். நாணுள்ள வரையும் நிறை அழியாதாகலின் அதைத் தாழாக்கியும், அகத்துள்ளவற்றைப் பிறர் கவராமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலிமையுள்ள இவ்விரு பண்புகளையும் ஒருங்கே நீக்கலின் காமவேட்கையைக் கோடரியாக்கியும், கூறினாள். இஃது உருவக வணி.
கலைஞர் உரை:
காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆண்களை விடப் பெண்களுக்குக் காமத்தை அடக்கி யாளும் நிறை என்ற குணம் இயல்பாக உள்ளது. அது நாணத்தோடு கூடிய தன்னடக்கம். அந்தப் பெண்மைச் சிறப்பையும் பிரிவாற்றாமை கெடுத்துவிட்டதைக் காதலி சொல்லுகிறாள்;) காமம் என்கிற கோடரி நாணம் என்ற தாழ்ப்பாளிட்டு மூடப்பட்டிருக்கிற நிறை என்னும் கதவை உடைத்துவிடுகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நாண் என்னும் தாழ்ப்பாளினைக் கோத்த நிறையென்னும் கதவினைக் காம வேட்கையாகிய கணிச்சி முறிக்கின்றது. அதனை நிறுத்தித் தடுக்க முடியவில்லை.
தமிழ்க்குழவி உரை:
வெட்கமாகிய தாழ்ப்பாள் இட்ட மனவடக்கத்தை மிகப் பெருகும் காதல் உணர்வாகிய கோடரி வெட்டி உடைத்து வீழ்த்தி விடுகிறது.
Translation
The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
Explanation
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
Transliteration
Kaamak Kanichchi Utaikkum Niraiyennum Naanuththaazh Veezhththa Kadhavu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1251