|
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?(தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முயக்கிடைத் தண்வளி போழ- அங்ஙனம் கைகளைத் தளர்த்த போது எம் இருவர்க்குமிடையே ஒரு சிறுதென்றற் போழ்ந்து நுழைந்ததாக; பேதை பெருமழைக் கண் பசப்பு உற்ற- அத்துணைச் சிற்றிடையீடும் பொறாது, என் இளங் காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் பசலையடைந்து விட்டன. அத்தகைய கண்கள் நாடுங் காடும் ஆறும் மலையுமாகிய மாபேரிடையீடுகளையெல்லாம் எங்ஙனம் பொறுத்தனவோ! 'போழ' என்றது இருவருடம்பும் ஒன்றென ஒன்றியிருந்தமை தோன்ற நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நாங்களிருவரும் புணரும்போது தழுவியிருக்கும் எங்கள் மத்தியில் சந்துண்டாகிக் குளிர்காற்றுப் புகுந்தாலும் அவள் கண் பசந்து அழுதுவிடுவாளே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்தியதால் இருவருக்குமிடையே சிறு காற்று நுழைந்தது. அந்தச் சிறிய இடைவெளியினையும் பொறுக்க முடியாமல் இப்போதையினுடைய குளிர்ச்சி பொருந்திய கண்கள் பசப்பு நிறம் அடைந்தன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தழுவும் போது கைகள் தளர இடையே புகுந்த இளமென் காற்றால் என்னவள் கண்களும் நிறம்மாறி விட்டன.
|
|
Translation
|
|
As we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care.
|
|
Explanation
|
|
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
|
|
Transliteration
|
|
Muyakkitaith Thanvali Pozhap Pasapputra
Pedhai Perumazhaik Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|