Thirukural

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்.

தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.
தேவநேயப் பாவாணர் உரை:
[வினைமுடித்து மீளுந் தலைமகன் முன்னிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.] முயங்கிய கைகளை ஊக்க- தன்னை யிறுகக்கட்டித் தழுவிய கைகளை இவட்கு நோமென்று கருதி ஒரு சிறிது தளர்த்தேனாக; பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது- அதற்குள், அச்சிறு தளர்ச்சியையும் பொறாது, பசும்பொன் வளையல்களை யணிந்த என் இளங்காதலியின் நெற்றி பசலை பாய்ந்துவிட்டது. அத்தகைய மெல்லியல் நெற்றி இப்பிரிவிற்கு யாதாகுமோ! இனிக் கடுகிச் செல்லவேண்டுமென்பது கருத்து.
கலைஞர் உரை:
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இந்தச் சமயத்தில் வெளியூரிலிருக்கும் காதலனும் காதலியை நினைக்கிறான்;) நான் அவளைக் கட்டித் தழுவிய என் கைகளைத் தளர்த்தினாலும் அவள் நெற்றி பசந்துவிடுமே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன்னை இறுகத் தழுவிய கைகளை இவளுக்கு நோகும் என்று கருதி ஒரு போது நான் தளர்த்தினேன், அதனையும் கூடப் பொறுக்கமுடியாமல் பசிய வளையவல்களையணிந்த இப்போதையினுடைய நுதல் பசலை நிறம் அடைந்தது.
தமிழ்க்குழவி உரை:
கட்டித் தழுவிய கைகளை சற்றே தளர்த்தியதும் வளையணிந்த என் காதலியின் நெற்றியில் பசலை படரத் தொடங்கிவிட்டது.
Translation
One day the fervent pressure of embracing arms I checked, Grew wan the forehead of the maid with golden armlet decked.
Explanation
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
Transliteration
Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu Paindhotip Pedhai Nudhal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1238