|
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன. கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மணந்தநாள் வீங்கிய தோள்- காதலர் மணந்த நாளில் மகிழ்ச்சி மிகுதியாற் பூரித்த உன் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும்- இன்று அவர் பிரிந்தமையை விளக்கமாகப் பிறர்க்கு உணர்த்துவன போல் மெலிவடைகின்றன. இது கூடாது. அன்று பூரித்ததும் இன்று மெலிந்ததும் ஆகிய இரண்டையும் கண்டவர், உண்மையுணர்ந்து தலைமகனைக் குறை கூறுவர் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கண்கள் அப்படி. என் உடம்போ) நானும் என் காதலரும் மணம் செய்துகொண்ட காலத்தில் பூரிப்பினால் பருத்த என் தேகம் இப்போது என் காதலர் பிரிந்திருப்பதால் உண்டான நிலைமையை முற்றிலும் விவரமாக எல்லாருக்கும் விளக்கிச் சொல்வதுபோல மிகவும் மெலிந்துவிட்டது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலர் மணந்தபோது இன்ப மிகுதியால் பூரித்த தோள்கள் இன்று அவர் பிரிந்தமையினை விளங்க உணர்த்துவது போன்று மெலிந்துவிட்டன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலரோடு கலந்து மகிழ்ந்திருந்த நாட்களில் பருத்து திரண்டிருந்த எம் தோள்கள் இன்று மெலிந்து நலிந்து அவரின் பிரிவை மற்றவர்க்கும் அறிவிக்கின்றனவோ?
|
|
Translation
|
|
These withered arms, desertion's pangs abundantly display,
That swelled with joy on that glad nuptial day.
|
|
Explanation
|
|
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).
|
|
Transliteration
|
|
Thanandhamai Saala Arivippa Polum
Manandhanaal Veengiya Thol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|