|
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள்- தம் துணைவர் நீங்கியதனால் அவராற்பெற்ற செயற்கை யழகேயன்றிப் பழைய இயற்கை யழகு மிழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும்- தம் பருமை குன்றியதனாற் பசும்பொன் வளையல்கள் கழலச் செய்யும். 'சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. முதலொடு சினைக்குள்ள ஒற்றுமைபற்றித் 'துணை நீங்கி' என்றாள். அன்று அவர் பிரிந்தாரென்று அவரது அன்பின்மையை உணர்த்தின; இன்று அவர் குறித்த பருவத்து வந்திலரென்று அவரது பொய்ம்மையை உணர்த்துகின்றன. இங்ஙனம் அவர் மேற் குறைகூறுதற்கு அவரே இடந்தந்துள்ளார் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) காதலரைப் பிரிந்த துயரத்தால் முன்னிருந்த அழகையும் மினுமினுப்பையும் வழுவழுப்பையும் இழந்து மெலிந்துவிட்ட என் கைகளிலுள்ள பசும்பொன் வளையல்கள் தாமாகவே கழன்றுவிடுகின்றன.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
துணைவர் நீங்கியதால் அவரால் பெற்ற செயற்கையேயன்றி இயற்கையழகும் இழந்த தோள்கள், இன்று அதற்கு மேலேதம் பெருமை இழந்து வளையல்கள் சுழல நிற்கின்றன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துணைவராம் காதலர் தொலைதூரம் செல்ல தோள்கள் மெலிந்து விட்டன, கைகளில் இருந்து வளையல்கள் தாமாகவே கழன்று விழுகின்றன.
|
|
Translation
|
|
When lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms.
|
|
Explanation
|
|
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.
|
|
Transliteration
|
|
Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|