Thirukural

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
பசந்து பனிவாரும் கண்- பசலையடைதல் மேலும் நீர்வடியும் உன் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்- நம்மால் விரும்பப்பட்டவர் அன்பு செய்யாமையைப் பிறருக்குச் சொல்வன போலாகின்றன. ஆதலால் நீ ஆற்றல் வேண்டும். சொல்லுவ போலுதல் அதனை அவருய்த் துணருமாறு நிலைமை கெடுதல். நயந்தவர்க்கு என்று பாடமோதுவாரு முளர்.
கலைஞர் உரை:
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அது மட்டுமன்றி,) என்னுடைய கண்கள் என் காதலர் இன்னும் வரவில்லை யென்பதை ஊராருக்கு அறிவிப்பன போலப் பசந்து கண்ணீர் வடித்து அழுதுகொண்டே யிருக்கின்றன.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பசப்பு நிறமடைந்து நீர் பொழுகின்ற கண்கள் தம்மால் அன்பு செய்யப்பட்டவரது அன்பில்லாத் தன்மையினைப் பிறர்க்குச் சொல்லுவனபோல் இருக்கின்றன.
தமிழ்க்குழவி உரை:
பசலையால் துன்புற்று கண்ணீர் சிந்தும் என் கண்கள், எம் காதலரின் அன்பு காட்டா நிலைமையை அனைவருக்கும் சொல்கின்றனவோ?
Translation
The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears.
Explanation
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.
Transliteration
Nayandhavar Nalkaamai Solluva Polum Pasandhu Panivaarum Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1232