Thirukural

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்துன்பம் வளர வரும்.

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது.(குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை-காதலரோடு கூடியிருந்த நாளெல்லாம் குளிர்ச்சி தோன்றிப் பசந்து வந்த மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்-இந்நாளில் எனக்கு உயிர் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிப் துன்பம் மேன்மேலும் வளருமாறு வருகின்றது. 'பனியரும்பிப் பைதல் கொள்' என்னுந் தொடர், நடுக்கங் கொண்டு துன்பப்பட என்றொரு குறிப்புப் பொருளுந் தோன்ற நின்றது.
கலைஞர் உரை:
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கண்ணீர் அரும்பித் துன்பப்படுவதுபோலத் தோன்றுகிற இந்த மாலைப்பொழுது எனக்கு அச்சமும் துன்பமும் அதிகரிக்கச் செய்யத்தான் வருகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமுற்று பசந்துவந்த மாலைப் பொழுது இந்நாள் எனக்கு உயிர்வாழ்வதில் வெறுப்புண்டாக்கித் துன்பம் ஒரு காலைக் கொருகால் மிகுதியாகுமாறு வருகின்றது.
தமிழ்க்குழவி உரை:
பனிபடர மயக்கத்துடன் வருகின்ற மாலைப் பொழுது, காதலர் பிரிந்த இந்நேரத்தில் மேலும், மேலும் துன்பம் தந்து வளர்கிறதே.
Translation
With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows.
Explanation
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.
Transliteration
Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith Thunpam Valara Varum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1223