|
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மருள்மாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக. (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தன் செயலறவை அதன் மேலேற்றிச் சொல்லியது) மருள்மாலை - மயங்கும் மாலையே!; புன்கண்ணை - நீயும் என்னைப்போலத் துன்பமுடையையாயிருக்கின்றாய்; நின்துணை எம் கேள் போல் வன்கண்ணதோ-உன்னுடைய துணையும் என்னுடைய துணைபோல; அன்பற்றதோ? சொல்வாயாக மருளுதல் அல்லது மயங்குதல் பகலும் இரவும் தம்முட்கலத்தல். அவை கலங்குதற் பொருளும் உணர்த்தும் .புன்கண் அழகின்மையும் துன்பமும். மாலைப் பொழுது ஒளியின்றிப் பொலிவிழத்தலாலும், தலைமகள் தன் செயலற்ற நிலையை அதன் மேலும் ஏற்றிக் கூறினாள். எமக்குத் துன்பஞ்செய்தாய்; அதனால் , நீயுங் கலங்கிப் பொலிவிழந்தாய் என்னுங் குறிப்பால் 'வாழி' என்றாள்.
|
|
கலைஞர் உரை:
|
|
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(என்ன ? மணந்தார் உயிருண்ணும் நீகூட வாடி வருந்தி அழுது வழிகிறாயே! ஏன் ?) மருண்டு வருகிற மாலைப் பொழுதே! கண் கலங்கியிருக்கிறாயே! ஏன் ? என் காதலரைப் போலவே உன் காதலரும் உன்னைப் பிரிந்து வராமலிருக்கிற கன்னெஞ்சரா ? (அப்படியானால் உனக்கு இத்துன்பம் நீங்கி நலமுண்டாக) உன்னை வாழ்த்துகிறேன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப்போல ஒளியிழந்த கண்களையுடையதாக இருக்கின்றாய்; உன் துணையும் எம்முடைய துணையே போல் வன்கண்மையுடைதோ? இரக்கமற்றதோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மயங்குகின்ற மாலைப் பொழுதே, நீயும் துயருறுகின்றாயே, என் காதலரைப் போல நின் துணைவரும் இரக்கமற்றவரோ?
|
|
Translation
|
|
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?.
|
|
Explanation
|
|
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
|
|
Transliteration
|
|
Punkannai Vaazhi Marulmaalai Emkelpol
Vankanna Thonin Thunai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|