Thirukural

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத்து ஓவா வரல்.

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.)
மணக்குடவர் உரை:
தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய உள்ளத்தின் கண் எம்மைச் செல்லவிடாது அதைக் காவல் செய்துகொண்ட காதலர் ; எம் நெஞ்சத்து ஓவாவரல் நாணார் கொல் - தாம் மட்டும் எம்முடைய உள்ளத்தின்கண் இடைவிடாது வருவதற்கு நாணாரோ? ஒருவரைத் தம்மிடத்திற்கு ஒருபோதும் வரவிடாது தடுத்து விட்டுத் தாம் மட்டும் அவரிடத்திற்கு ஓயாது செல்லுதல், நாணுடையார் செயலன்மையின் 'நாணார்கொல்' என்றாள். 'கடி' காவலுணர்த்தும் உரிச்சொல்; இனி, விலக்குப் பொருளது எனினுமாம். 'கொல்' ஐயம்.
கலைஞர் உரை:
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தம் மனத்திலிருந்து என்னை அடியோடு நீக்கிவிட்ட அவர் என்னுடைய மனத்துக்குள் மட்டும் ஓயாது வந்து வந்து நுழை கிறாரே! அவருக்கு வெட்கமில்லையா?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதலராகிய அவருடைய மனதில் யாம் இருக்கக் கூடாதென்று காவல் செய்கின்ற அவர் எம்முடைய நெஞ்சத்திற்குத் தவறாமல் வருவதற்கு வெட்கப்பட மாட்டாரோ?.
தமிழ்க்குழவி உரை:
தம் நெஞ்சத்துள் எம்மை வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் காதலர், எம் நெஞ்சத்துள் ஓயாமல் வந்து கொண்டிருக்கிறாரே, அவருக்கு வெட்கம் ஏதுமில்லை.
Translation
Me from his heart he jealously excludes: Hath he no shame who ceaseless on my heart intrudes?.
Explanation
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
Transliteration
Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol Emnenjaththu Ovaa Varal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1205