Thirukural

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துஓஒ உளரே அவர்.

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார். ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
எம் நெஞ்சத்து அவர் ஓஓ உளரே - எம்முடைய உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கின்றாரே! ; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அதுபோல யாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றேமோ, இல்லேமோ? தெரியவில்லையே! யாம் அவர் உள்ளத்திலிருந்தும் வினை முடியாமையால் வரவில்லையோ, அல்லது அது முடிந்தும் யாம் அவர் உள்ளத்தில் இல்லாமையால் வரவில்லையோ, என்பது கருத்து. ஓகாரம் ஈண்டுச் சிறப்புப் பற்றி இடைவிடாமை யுணர்த்தி நின்றது. இனி, வியப்புக் குறிப்பினது என்றுமாம். 'ஓஒ' இசைநிறை யளபெடை. 'கொல்' ஐயம். ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அவர் என்னை ஏன் நினைக்கப் போகிறார் ? அவர் மனத்தில் நான் இருந்தால்தானே நினைப்பார்!) என் மனத்தில் என் காதலர் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறாரே. அப்படி அவர் மனத்தில் நான் இருக்கிறேனா ? (இருந்தால் நினையாமல் இருப்பாரா ?)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எம்முடைய நெஞ்சத்தில் காதலர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றார். அதுபோலவே அவருடைய நெஞ்சத்தில் நாமும் இருந்துகொண்டு இருக்கிறோமோ?.
தமிழ்க்குழவி உரை:
எம் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கின்றார். இது போல அவர் நெஞ்சத்தும் யாம் இனிதாக இருக்கத் தானே செய்வேன்!
Translation
Have I a place within his heart! From mine, alas! he never doth depart.
Explanation
He continues to abide in my soul, do I likewise abide in his ?.
Transliteration
Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu Oo Ulare Avar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1204