Thirukural

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்உற்றநாள் உள்ள உளேன்.

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்; இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(அவரொடு கூடி நுகர்ந்தகாலை யின்பத்தை நினைந்து இறந்து படுநிலை யடைகின்றாய். அதை மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) யான் அவரோடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு கூடிய காலை யின்பத்தை இடைவிடாது நினைத்தலாலேயே இன்று இறந்து படாதிருக்கின்றேன்; மற்று யான் என் உளேன் - வேறு எவ்வகையில் நான் உயிர்வாழ முடியும்? நான் உயிர்வாழ்வதற்குக் காதலர் தூது வருதல். நம் தூது அவரிடம் சேர்தல் முதலிய பிறவழிகளும் உளவேனும், யான் அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது என்பர் பரிமேலழகர். 'நாள்' ஆகுபொருள்.
கலைஞர் உரை:
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இப்படித் துன்புறுவதைவிட இறப்பதே மேல்.) அவரோடு நான் அனுபவித்த இன்பத்தை நினைத்து அவ்வின்பத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையினால் என் உயிர் போகமாட்டேனென்கிறதே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நான் அவருடன் இன்பம் நுகர்ந்த நாளினை நினைப்பதால் இத்துன்பக் காலத்திலும் உயிர்வாழ்கின்றேன். அவ்வாறு இல்லாமற் போனால் வேறு எப்படி உயிர் வாழ்ந்திருப்பேன்?.
தமிழ்க்குழவி உரை:
அவரோடு கூடியிருந்த மகிழ்ச்சியான நாட்களை எண்ணி எண்ணித்தான் நான் உயிரோடு இருக்கிறேன். இல்லையேல் யான் எப்படி உயிர் தரித்தல் முடியும்?
Translation
How live I yet? I live to ponder o'er The days of bliss with him that are no more.
Explanation
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?.
Transliteration
Matriyaan Ennulen Manno Avaroti Yaan Utranaal Ulla Ulen

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1206