|
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்தாற்றினாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார்-நம்மாற் காதல் செய்யப்பட்டவர் ;தாம் காதல் கொள்ளாக்கடை-அவ்வாறே தாமும் நம்மிடத்துக் காதல் செய்யாவிடத்து ; நமக்கு எவன் செய்ப-நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்? அக்காதலால் நாம் பெற்றது துன்பமே யென்பதாம். எச்சவும்மை தொக்கது. 'ஓ' அசைநிலை
|
|
கலைஞர் உரை:
|
|
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படியிருந்து என்ன பயன் ?) நான் காதலிக்கிற என் கணவர் தாம் என்னைக் காதலிக்காவிட்டால் அவர் எனக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலர் தாமும் நம்மிடத்தில் காதல் கொள்ளாமற்போனால் நம்முடைய காதலினைக்கொண்டுள்ள காதலர் நமக்கு என்ன இன்பத்தினைச் செய்து விடுவார்?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நாம் காதல் கொள்ளும் அவர் நம்பால் காதல் கொள்ளாவிடின் அவரால் எனக்கு என்ன நன்மை வாய்த்து விடப் போகிறது.
|
|
Translation
|
|
From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me?.
|
|
Explanation
|
|
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?.
|
|
Transliteration
|
|
Naamkaadhal Kontaar Namakkevan Seypavo
Thaamkaadhal Kollaak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|