Thirukural

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர். இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.
தேவநேயப் பாவாணர் உரை:
(காதலரை யியற்பழித்த லஞ்சி அவரது அருளின்மையை மறைத்த நீ தெய்வக் கற்பினை யாதலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார்-கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப் படுவாரும் ; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர்-தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப்படாராயின் தீவினையாட்டியரே. தீவினையேற்கு அந்நன்குமதிப்பாற் பயனில்லை யென்பதாம். கெழீஇயின்மை நல்வினையின்மை. 'கெழீஇ' இன்னிசையளபெடை 'படாஅர்' இசைநிறையளபெடை. சிறப்பும்மை தொக்கது.
கலைஞர் உரை:
விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நாம் காதலிக்கிற கணவர் நம்மைக் காதலிக்காவிட்டால் அவர் அன்பில்லாதவரே.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கற்பு நிறைந்த பெண்களால் நன்கு மதிக்கப்படும் தலைவியரும் தாம் விரும்பும் கணவரால் நன்கு விரும்பப்படா விட்டால் தீவினையுடையவர்களே ஆவார்கள். நன்மதிப்பைப் பெற்றிருந்தும் பயனடையாதவர்களே ஆவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
நாம் விரும்பும் காதலர் நம்மை விரும்பார் எனின், அவர்க்கு நம்பால் நட்புணர்வு இல்லை என்றே கொள்ளலாம்.
Translation
Those well-beloved will luckless prove, Unless beloved by those they love.
Explanation
Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
Transliteration
Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar Veezhap Pataaar Enin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1194