|
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
காமம் ஒருதலையான் இன்னாது-ஆடவன் பெண்டு என்னும் இருபாலுள் காதல் ஒருதலைக்கண் மட்டுமிருப்பின் அது துன்பந்தருவதேயாம்; காப்போல இருதலையானும் இனிது-காவாட்டுச் சுமைபோலே இருதலையும அது ஒத்திருந்த விடத்தே இன்பந்தருவதாம். என்னிடத்துள்ள காதல் அவரிடத்து மிருப்பின் இவ்வாறு துன்புறேன் என்பதாம். மூன்றாம் வேற்றுமை ஆனுருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தன வேற்றுமை மயக்கம்.
|
|
கலைஞர் உரை:
|
|
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
காம ஆசை என்பது தராசுபோலக் கணவன் மனைவி ஆகிய இருவரிடத்திலும் சமமாக இருந்தால்தான் இன்பம். அப்படியின்றி ஒரு பக்கம் அதிகமாகவும் இன்னொரு பக்கத்தில் குறைவாகவும் இருந்தால் துன்பந்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலர் இருவரிடமும் இருக்க வேண்டிய காம வேட்கை ஒருவரிடம் மட்டும் உண்டானால் அது துன்பமானதாகும். காவடித் தண்டின் பாரம் போல இரு பக்கமும் ஓத்திருந்தால் அது இனிமையானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காவடித்தண்டிற்கு சுமை இருபக்கமும் சமமாக இருத்தல் வேண்டும். அதுபோல காதலில் இருபாலர்க்கும் சமமாக அன்பிருந்தால் மட்டுமே இன்பம் மிகும்.
|
|
Translation
|
|
Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good.
|
|
Explanation
|
|
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.
|
|
Transliteration
|
|
Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|