Thirukural

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேவாழுநம் என்னும் செருக்கு.

காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும். இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
வாழுநம் என்னும் செருக்கு-நம் காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து விரைந்து வருவர், அதன்பின் இன்புற்று வாழ்வோ மென்னும் மிடுக்கு; வீழுநர் வீழப்படுவார்க்கே அமையும்-தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப் பெறும் மகளிர்க்கே அமைவதாம். நாம் அவராற் காதலிக்கப் பெறாமையின் நமக்கு அஃதில்லை யென்பதாம். ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
கலைஞர் உரை:
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தான் காதலிக்கிற கணவனால் தானும் காதலிக்கப்படுகிற பெண்ணுக்குத்தான் 'நல்வாழ்வு பெற்றேன்' என்று சொல்லிக் கொள்ளும் பெருமை கிடைக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தாம் காதலிக்கும் தலைவரால் காதலிக்கப்படும் மகளிர்க்குப் பொருத்தமானது என்னவென்றால் காதலர் பிரிந்திருந்தாராயினும் நம்மை நினைத்து விரைவில் வருவார். வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்று இருக்கின்ற செருக்காகும்.
தமிழ்க்குழவி உரை:
தம்மால் விரும்பப்படுபவர் தம்மை விரும்புகின்றபொழுது வாழ்வில் நிறைவெய்திய பெருமிதம் ஒருவர்க்குத் தானே அமையும்.
Translation
Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own.'.
Explanation
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).
Transliteration
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume Vaazhunam Ennum Serukku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1193