|
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின்-இப்பிரிவிற்கு யான் உடம்படும்வகை பசப்பியவர் இன்று உன் கருத்துப்படி குற்றமற்றவராயின்; என்மேனி பட்ட ஆங்கு பசக்க-என் மேனி இன்று பசந்தபடியே பசக்க. இப்பிரிவின் கொடுமையை இதற்குமுன் பட்டறியாத என்னை இதற்குடன்படுத்திப் பிரிந்தவர், எவ்வகையிலுங் குற்றமற்றவரென்று நாட்டுவதுதானே உன் விருப்பம்! அங்ஙனமாயின், என் மேனியையும் பசலையையுங் கவனிப்பானேன்? அவை எங்ஙனமிருந்தால் தானென்ன என்பது பட நின்றமையின் 'மன்' ஒழியிசை பற்றி வந்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(என் மேனி எவ்வளவு வேண்டுமானாலும் பசக்கட்டும்.) என்னைப் பிரிந்திருப்பதால் என் காதலருக்கு நன்மை வரு மென்றால், யார் பரிகாசம் செய்தாலும் சரி. என் மேனி இன்னும் பசக்கட்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இந்தப் பிரிவை நான் உடன்படும் முறையில் சொன்ன தலைவர் நல்ல நிலையில் இருந்து வருவாரானால் என் உடம்பு பசப்பு நிறம் அடைந்தே இருக்கட்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என்னை நல்லபடியாகப் பிரிந்து சென்ற காதலர்க்கு இப் பிரிவால் நன்மைகள் உண்டாகுமாயின், என் மேனியில் பசலைநோய் படர்வதாகவே இருக்கட்டும்.
|
|
Translation
|
|
Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain!.
|
|
Explanation
|
|
If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.
|
|
Transliteration
|
|
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar
Nannilaiyar Aavar Enin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|