|
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின். இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தலைமகளை யாற்றுவித்தற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவிடத்து அவள் இயற்பட மொழிந்தது.) (இ-ரை.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்-பிரிவிற்கு உடம்படச்செய்த காதலர் இன்றுவந்து கூடாமையை நட்டோர் பழியாராயின்;பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே-பசலையடைந்தாள் என்று வேற்றுமைப்படச் சொல்லப்படாது, பசலையேயானாள் என்று ஒற்றுமைப்படச்சொல்லப்பெறுதலும் நல்லதேயாம். பசலையடைதல் மேனிமட்டும் பசப்பு நிறம்பெறுதல். பசலையாதல் உடம்புமுழுவதும் பசப்பாக மாறுதல். நட்டோர் என்பது அவாய்நிலையால் வந்தது;இகழ்ச்சிக் குறிப்பு. எகாரம் தேற்றம்.
|
|
கலைஞர் உரை:
|
|
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என்காதலர் இங்கில்லாதிருப்பதைப்பற்றி யாரும் அவரை இகழ்ந்து பேசாமலிருந்தால் அதுபோதும். நான் பசந்து போனேன் என்பதைப்பற்றி ஊரார் ஏளனம் செய்வதில் எனக்குப் பெருமைதான். (என் காதலர் சுகமாக வரட்டும்.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அன்று அன்புடன் கூடியதலைவரை அன்பில்லாதவரென்று பிறர் தூற்றாமல் இருப்பார்களேயானால் பசப்பு அடைந்துவிட்டாள் என்ற பெயரினைப் பெறுதல் எனக்கு நல்லதேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என் இசைவோடு பிரிந்து சென்ற காதலரை இவ்வூரார் தூற்றுதல் செய்யார் எனில் என்னைப் 'பசந்தாள்' எனக் கூறுதல் கூட நன்றே!
|
|
Translation
|
|
'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain.
|
|
Explanation
|
|
It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).
|
|
Transliteration
|
|
Pasappenap Perperudhal Nandre Nayappiththaar
Nalkaamai Thootraar Enin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|