Thirukural

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்காமநோய் செய்தஎன் கண்.

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)
மணக்குடவர் உரை:
கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
கடல் ஆற்றாக் காமநோய் செய்த என் கண்-கடலுஞ் சிறிதாம் வண்ணம் பேரளவுள்ள காமநோயை எனக்குச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும்-அத்தீவினையால் தாமும் தூக்கம் பெறாதனவாய்த் துன்பபப்படுகின்றன. வினைவிதைத்தவன் வினையறுப்பானாதலால், என்னைத் துன் புறுத்திய கண்கள் தாமும் துன்புறுகின்றன என்றாள்; காமநோய் காட்சியால் வந்ததனால், கண்ணே அந்நோயைத் தந்ததாகக் கூறினாள். கண் துன்புறுதலாவது அழுதலும் எரிச்சல் கொள்ளுதலும்.
கலைஞர் உரை:
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சமுத்திரத்தைவிடப் பெரிய காம வேதனையை எனக்கு உண்டாக்கி வைத்து விட்டு என் கண்கள் இமை மூடாமல் விழித்துக்கொண்டிருந்து தாம் துன்பப்பட்டுக் கொண்டிருக் கின்றனவே.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கடலும் சிறிதாகி விடுமாறு பெரிதாகிய காம நோயினைச் செய்துவிட்ட எனது கண்கள் அத்தீமையான செயலால் தூக்கம் வராமல் துன்பத்தில் உழலுகின்றன.
தமிழ்க்குழவி உரை:
கடலைக் காட்டிலும் பெரிதாகக் காதல் நோய் தந்து இன்று அதனாலேயே துயில முடியாமல் கண்கள் துயர் உறுகின்றன.
Translation
The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all repose.
Explanation
Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.
Transliteration
Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak Kaamanoi Seydhaen Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1175