Thirukural

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
உண்கண்-என் மையுண்ட கண்கள்; உயல் ஆற்றா உய்வு இல்நோய் என்கண் நிறுத்து-நான் தப்பமுடியாமைக் கேதுவான ஒழியாத காமநோயை என்னிடம் நிறுத்திவிட்டு; பெயல் ஆற்றாநீர் உலந்த-தாமும் தொடாந்து அழமுடியாவண்ணம் நீர் வற்றிவிட்டன. உய்வில் நோய் நிறுத்தலாவது, பிரிதலும் பின் விரைந்து கூடாமையு முடையாரைக் காட்டி, அதனானுண்டாகும் ஆற்றாமை நோயை நீடுநிற்கச்செய்தல். என்னை நெடிது வருந்தச்செய்த தீவினையால் தாமும் வற்றி வறண்டுபோயின என்பதாம்.
கலைஞர் உரை:
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.
சாலமன் பாப்பையா உரை:
மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சகிக்க முடியாத ஓயாத காமவேதனையை எனக்கு உண்டாக்கி வைத்துவிட்டு அழுது அழுது கண்ணீரற்று வறண்டு போய்விட்டனவே இந்தக் கண்கள்!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மையுண்ட கண்கள் நீக்க முடியாத காமநோயினை என்னிடம் நிறுத்தித் தாமும் அழமுடியாதபடி நீர்வற்றி இருக்கின்றன.
தமிழ்க்குழவி உரை:
காதலரைக் காட்டித் தீர்க்க வியலாத காதல் நோயை எமக்குத் தந்த கண்கள் இன்று அழுவதற்குக் கூட முடியாமல் நீர் வற்றிப் போய் விட்டன.
Translation
Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon me pain that knows no remedy.
Explanation
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.
Transliteration
Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa Uyvilnoi Enkan Niruththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1174