Thirukural

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)
மணக்குடவர் உரை:
இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது-இக்கண்கள் அன்று எண்ணிப்பாராது தாமே காதலரைத் திடுமென்று நோக்கிவிட்டு, இன்றும் அவரைக் காணவில்லையென்று தாமே யிருந்தழுகின்ற செய்தி ; நகத்தக்கது உடைத்து-சிரிக்கத் தக்க தன்மையை யுடையது. தாம் ஒன்றை விரும்பிச் செய்துவிட்டுத் தாமே அதன் விளைவு பற்றி யழுவதுபகுத்தறிவாளர் நகையாடத் தக்க செய்தியாதலின், 'நகத்தக்க துடைத்து என்றாள். கண்கள் என்பது அதிகாரத்தால் வந்தது. ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
திடீரென்று அவரைக் கண்டவுடனேயே ஆசை கொண்டுவிட்டு, இப்போது இந்தக் கண்கள் அழுதுகொண்டிருப்பது கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இக்கண்கள் அன்று காதலரைத்தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்ற தன்மை நம்மால் சிரிக்கத் தக்கதாக இருக்கின்றது.
தமிழ்க்குழவி உரை:
அன்று தாமே விரைந்து நோக்கி காதலர் பால் அன்பை வளர்த்து, இன்று தாமே கண்ணீர் உகுத்து அழுவது நகைப்புக்கரியதே.
Translation
The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile!.
Explanation
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?.
Transliteration
Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum Ithunakath Thakka Thutaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1173