Thirukural

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை.

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்யாயை நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
துறைவன் துறந்தமை-தலைவன் என்னைவிட்டுப் பிரிந்தமையை; முன்கை இறை இறவா நின்றவளை தூற்றாகொல்-அவனுணர்த்தாமல் தாமே யுணர்ந்து என் முன்கையின் வளைவினின்று கழன்று நின்ற வளையல்களே எனக்கு அறிவிக்க வேண்டுமோ? பிரிந்து செல்ல முன்னமே தீர்மானித்து விட்டமையால் 'துறந்தமை' யென்றும், குறிப்பாலறிந்து வாடிய வாட்டத்தால் வளைகழன்றமையால் 'இறவா நின்ற வளை' யென்றும். பலரறிய வெளிப்படையாய் நிகழ்ந்தமையால் 'தூற்றாகொல்' என்றுங் கூறினாள். செலவழுங்குவித்து எனக்குத் துணையாயிராது. செலவு நிகழ்ந்ததைக் கூறித் துன்பஞ் செய்தாய் என்று புலந்து கூறியவாறு 'வளை' பால்பகா அஃறிணைப்பெயர்.
கலைஞர் உரை:
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அவன் போனபின் தலைவி சொல்வது:) முன்னங்கை ரேகைகளையும் கடந்து கழன்றுவிடுவன போன்ற என் வளையல்களுடைய ஓசையே என் தலைவன் பிரிந்து போய்விட்டதை ஊராருக்கெல்லாம் தூற்றிவிடும்போல் இருக்கிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தலைவர் என்னைப் பிரிந்து செல்லுகின்றார் என்பதனை அவர் உணர்த்தாமலேயே தாமே உணர்ந்து என் முன் கையினின்றும் சுழலுகின்ற வளையல்கள் அறிவியாவோ?.
தமிழ்க்குழவி உரை:
தலைவன் பிரிந்து சென்ற துயரைத் தாங்காமல் என் வளைகள் கூட கழன்று வீழ்ந்து ஊரார்க்கு உண்மை உரைத்து விடுகின்றன.
Translation
The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore.
Explanation
Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?.
Transliteration
Thuraivan Thurandhamai Thootraakol Munkai Iraiiravaa Nindra Valai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1157