Thirukural

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்இன்னாது இனியார்ப் பிரிவு.

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
இனன் இல்லா ஊர் வாழ்தல் இன்னாது- மகளிர்க்குக் குறிப்பறிந் துதவும் உறவினர் போன்ற தோழியர் இல்லாத வேற்றூரில் வாழ்தல் துன்பந்தருவதாம்; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது- இனி, தமக்கு இனிய காதலரை விட்டுப் பிரிவதோ, அதனினும் மிகத் துன்பந் தருவதாம். தலைவனைச் செலவழுங்குவியாது செலவுடம்பட்டு வந்தமை பற்றித் தோழியொடு புலக்கின்றாளாதலின், 'இனனில்லூர்' என்றாள். இருவகைத் துன்பமுந் தனக்குண்மையை உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு.
கலைஞர் உரை:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.
சாலமன் பாப்பையா உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
உற்றார் உறவினர் இல்லாத ஊரில் குடியிருப்பது மனிதருக்கு மிகவும் துன்பமான வாழ்க்கை. அதைவிடத்துன்பம் தருவது ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்திருப்பது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பெண்களுக்குத் தம் குறிப்பு அறியும் துணையான தோழியர் இல்லாத வேற்றூரில் வாழ்வது துன்பம் செய்வதாகும். அதனைவிடத் தம் காதலரைப் பிரிதல் மேலும் துன்பத்தினைச் செய்வதாகும்.
தமிழ்க்குழவி உரை:
உறவுகள் சூழ்ந்திராத ஊரில் வாழ்தல் துன்பம் தருவது. அதனிலும் கொடியது. இனிய தலைவரைப் பிரிந்து தலைவி வாழ்வது.
Translation
'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewell.
Explanation
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.
Transliteration
Innaadhu Inaniloor Vaazhdhal Adhaninum Innaadhu Iniyaarp Pirivu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1158