|
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தலைமகன் பிரிவுணர்த்தியதைத் தெரிவித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின்-என் காதற்பெருக்கையுங் கவவுக்கை யிறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன்நின்று தம் பிரிவை யுணர்த்தும் வன்னெஞ்சராயின்; நல்குவர் என்னும் நசை அரிது-அத்தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செய்வரென்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான். இது தலைமகள் தன் இளமையினாலும் இல்லறத் தொடக்கநிலையினாலும், பொருளின் இன்றியமையாமையையும் ஆடவர் கடமையயும் உணராது காதலொன்றையே கருதிக்கூறிய கூற்றாகும். அருமை பெரும்பாலும் நிறைவேறாமை, செலவழுங்குவித்தல் பயன்.
|
|
கலைஞர் உரை:
|
|
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் காதலர் மீண்டும் மீண்டும் தாம் பிரிந்து போக வேண்டியிருக்கிற அவசியத்தைப்பற்றியே சொல்லும் கடின சித்தமுடையவராக இருக்கிறார். அதனால் அவர் என் விருப்பத்தின்படி போகாமல் இருப்பார் என்ற ஆசையை நான் விட்டுவிட வேண்டியதுதான். (விடை கொடுக்கிறாள்).
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தலைவர் முன்னின்று தம் பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையவராயின் அத்தன்மையர் பிறகு வந்து கூடி அன்பு செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படவேண்டியதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிரிகிறேன் என்று பேசுகிற அளவுக்கு இரக்க மில்லாதவர் ஆயின் மீண்டும் வந்து அன்பு செய்வார் என்று எதிர்பார்ப்பது அரிதன்றோ?
|
|
Translation
|
|
To cherish longing hope that he should ever gracious be,
Is hard, when he could stand, and of departure speak to me.
|
|
Explanation
|
|
If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.
|
|
Transliteration
|
|
Pirivuraikkum Vankannar Aayin Aridhavar
Nalkuvar Ennum Nasai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|