Thirukural

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)
மணக்குடவர் உரை:
காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல்-தோழி! நீ என்னுயிரைப் பேணிக்காப்பாயாயின், அதற்கு இன்றியமையாத் துணைவராக அமைந்தவரின் பிரிவு நேராமற் காப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது-பின்பு அவர் செலவழுங்குவாரின்றிச் சென்று விடின், என் உயிருஞ் சென்றுவிடும்; அதன்பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். 'அமைந்தார்' என்னுஞ்சொல் இறைவன் ஏற்பாட்டின்படி அமைந்தவர் என்னுங் குறிப்பினது. (ஒ. நோ; 'marriages are made in heaven.) 'மற்று' பின்மை அல்லது வினைமாற்றுப் பொருளில் வந்தது.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
என்னைப் பாதுகாக்கவே கடமை பூண்டு ஒப்புக் கொண்ட என் கணவர் என்னை விட்டுப் போகிற எண்ணத்தை விட்டுவிடவேண்டும். போவாரானால் அவர் பிரிவை நான் சகித்திருக்க முடியாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எனது உயிர்போகாமல் காப்பாற்ற வேண்டுமானால் அதற்குரிய தலைவர் பிரிந்து செல்லாமல் நிறுத்துவாயாக, நிறுத்துவாரின்றி அவர் சென்றுவிட்டால் என்னுயிரும் செல்லும். பின்பு அவரைக் கூடுதல் முடியாததாகும்.
தமிழ்க்குழவி உரை:
தன்னைக் காத்துக் கொள்வதானால், காதலர் பிரிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரிந்து அவர் சென்றால் மீண்டும் வந்து சேர்வது அரிது.
Translation
If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again.
Explanation
If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.
Transliteration
Ompin Amaindhaar Pirivompal Matravar Neengin Aridhaal Punarvu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1155