|
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கேடும் பெருக்கமும் இல் அல்ல - பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கெனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால் , அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாத வையல்ல ; நெஞ்ச்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - ஆதலால் இவ்வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை , அறிவுநிறைந்தோர்க்கு அழகாம்.
அறிவுநிறைந்தோரும் உண்மையறியாது நடுவிகந்தா மாக்கம் விரும்பி ஒருபாற் கோடுவராயின் , தம் சிறப்பிழந்து பிறர்போலாவர் என்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு
நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு
அழகாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) ஏழையாக இருப்பதும் பணக்காரனாக இருப்பதும் உலகத்தில் எல்லாருக்கும் உள்ளதுதான். எவ்வளவு செல்வம் வருவதானாலும் மனம் நேர்மையை விட்டு, (செல்வத்தைக் கருதிக்) கோணாமல் இருப்பதுதான் உயர்ந்த குணமுடையவர்களுக்குச் சிறப்புத் தருவது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கெடுதியும் பெருக்கமும் யாவர்க்கும் இல்லாததல்ல; அவை பிறவியிலேயே அமைந்து கிடைப்பனவாகும். ஆதலால், மனத்தில் ஓரவஞ்சனையின்றி - ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடாமல் நடுவு நிலைமையுடன் இருப்பதே பெரியவர்களுக்கு அழகாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செல்வம் சேர்வதும், அழிவதும் வாழ்வில் இல்லாதவை அல்ல. ஆனால் எந்த சூழலிலும் நடுவு நிலைமை பிறழாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.
|
|
Translation
|
|
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.
|
|
Explanation
|
|
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
|
|
Transliteration
|
|
Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|