|
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும்.
இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. (இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.)
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தக்கார் தகவு இல்லர் என்பது-இவர் நேர்மை யுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உண்மை; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய மக்களால் அறியப்படும்.
தக்கார்க்கு நன்மக்களும் தகவிலார்க்குப் புன்மக்களும் பிறத்தல் இயல்பாதலின் , 'அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்றார். எச்சம் என்னும் சொல் , மக்களின் வாழ்க்கை மட்டுமன்றிப் பெற்றோரின் முகத்தோற்றமும் குணவமைதியும் எஞ்சி நிற்பதைக் குறிக்கும் . அதனால் , மக்கள் என்னுஞ் சொல்லினும் தகுதியும் பொருட்பொலிவு முடையதாம் .
'யோக்கியர்' என்னும் வடசொல் வழக்கூன்றியதால் , தக்கார் என்னும் தமிழ்சொல் வழக்கற்றதென அறிக .
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா
என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக்
கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஓரவஞ்சனையால் வருகின்ற செல்வம் சந்ததியைக் கெடுத்துவிடும்.) ஒருவன் நடுவுநிலைமை தவறாமல் இருந்தவனா அல்லவனா என்பதை அவனுடைய சந்ததிகளில் கண்டு கொள்ளலாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நடுவுநிலைமை உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள் என்பதனை அவரவர்களுக்குப் பின், எஞ்சி நிற்கும் நன்மை தீமைகளால் அறிந்து கொள்ளப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் நடுவு நிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பதனை அவருக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் மக்கள் பண்பாலும் அறிந்துகொள்ளலாம்.
|
|
Translation
|
|
Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.
|
|
Explanation
|
|
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
|
|
Transliteration
|
|
Thakkaar Thakavilar Enpadhu Avaravar
Echchaththaar Kaanap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|