Thirukural

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
காதலர் கண் உள்ளாராக - எம் காதலர் எப்போதும் எம் கண்ணுள் ளிருக்கின்றாராதலால் ; கரப்பாக்கு அறிந்து - அவர் மறைவதையறிந்து ; கண்ணும் எழுதேம் - கண்ணிற்கு மையிடுதலுஞ் செய்யேம் . இடைவிடாது காணப்படுகின்றவரைப் பிரிந்தாரென்று கருதுவது எங்ஙனந் தகும் என்பதாம் . ' கரப்பாக்கு ' தொழிற்பெயர் . ' பாக்கு ' தொழிற்பெயரீறு . இழிவு சிறப்பும்மை இடமாற்றப்பட்டது .
கலைஞர் உரை:
காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.
சாலமன் பாப்பையா உரை:
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
என் காதலர் என் கண்ணிலேயே இருந்துகொண்டி ருப்பதால் நான் என் கண்ணுக்கு மை தீட்டுவதை விட்டுவிட்டேன். ஏனென்றால், மை தீட்டும்போது அவர் மறைந்து போவாரோ என்ற எண்ணம் வருகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதலர் எப்போதும் எம் கண்ணில் உள்ளார். ஆதலால், எழுதுகின்ற அத்துணைக் காலமும் அவர் மறைவதனை அறிந்து, கண்ணினை மையினால் எழுதுவதும் செய்யமாட்டோம்.
தமிழ்க்குழவி உரை:
கண்ணிலேயே இருக்கின்றார் எம் காதலர் என்பதாலேயே, இப்போது கண்ணுக்கு மைதீட்டுவதையும் தவிர்த்து விட்டேன்.
Translation
My love doth ever in my eyes reside; I stain them not, fearing his form to hide.
Explanation
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.
Transliteration
Kannullaar Kaadha Lavaraakak Kannum Ezhudhem Karappaakku Arindhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1127