Thirukural

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.
தேவநேயப் பாவாணர் உரை:
காதலவர் நெஞ்சத்தாராக - எம் காதலர் எப்போதும் எம் நெஞ்சினுள் ளிருக்கின்றாராதலால் ; வேபாக்கு அறிந்து - அவர் சூடுறுதலை யறிந்து ; வெய்துஉண்டல் அஞ்சுதும் - வெம்மையாக வுண்ணுவதற்கு அஞ்சுகின்றேம் எப்போதும் எம்நெஞ்சிலிருக்கின்றவரைப் பிரிந்தாரென்று கருது வதென்னை என்பது குறிப்பெச்சம் , ' வேபாக்கு ' தொழிற்பெயர் ; 'பாக்கு ' தொழிற்பெயரீறு .
கலைஞர் உரை:
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
என் கண்ணில் மட்டுமா அவர் இருக்கிறார்? என் காதலர் என்னுடைய நெஞ்சிலேயும் இருந்துகொண்டிருப்பதால் சூடான உணவுகளை உண்ண அஞ்சுகிறேன். ஏனெனில், அது அவரைச் சுட்டுவிடுமோ என்று எண்ணுவதால்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எம் காதலர் எமது நெஞ்சிலேயே இருக்கின்றார். எனவே சூடான உணவை உண்டால் அவர் சூடுபட நேரும் என்றறிந்து சூடான உணவை உன்ன அஞ்சுகிறேன்.
தமிழ்க்குழவி உரை:
காதலர் நெஞ்சத்துள் இருக்கிறாரோ என்றெண்ணி நான் சூடான உணவை உண்பதற்குக் கூட இப்போது அஞ்சுகிறேன்.
Translation
Within my heart my lover dwells; from food I turn That smacks of heat, lest he should feel it burn.
Explanation
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.
Transliteration
Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal Anjudhum Vepaak Karindhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1128