Thirukural

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.(முன் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற்'களையுடைய (அகநா.களிற்.5)வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று.)
மணக்குடவர் உரை:
அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும். இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
( உடன் போக்குரைத்த தோழிக்கு அதனருமை கூறிமறுத்தது . ) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - அறிஞரால் மென்மைக்குச் சிறந்ததாகக் கொள்ளப்பெற்ற அனிச்சமலரும் ஒதி மத்தின் நொய்ய துய்முடியும் கூட ; மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - என் காதலியின் மெல்லிய உள்ளங்கால்களை முற்றிய நெருஞ்சி முட்போற் குத்தித் துன்புறுத்துமே . இத்தகைய மென் பாதத்தினள் கூர்ம் பருக்கைக் கற்களும் நீள்வேல் முள்ளும் நெடுகலும் பரவிக்கிடக்கும் வெஞ்சுரத்தை எங்ஙனங் கடப்பாள் ? ஆதலால் அக்கருத்தை விட்டுவிடு என்பது குறிப்பு . இது உடன்போக்கு மறுத்தலாயினும் , தலைமகளின் அடிநலத்தை யெடுத்துக் கூறுதலால் , இதுவும் நலம் புனைந்துரைத்தலேயாம் , பெருநெருஞ்சி முதிர்ந்த நிலையில் நெல்லிக் கனிபோலப் பசுமஞ்சள் நிறங்கொள்ளுமாதலின் ' பழம் ' என்றார் . இக்குறளிலுள்ள அணி உயர்வுநவிற்சி .
கலைஞர் உரை:
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.
சாலமன் பாப்பையா உரை:
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மிகவும் மிருதுவாகிய அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் சிறு மயிருங்கூட (என் காதலியின் பாதங்களில்) நெருஞ்சி முள்போலக் குத்திவிடக் கூடியவை என்னும்படி அவ்வளவு மிருதுவானவை என் காதலியின் பாதங்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மென்மையான அனிச்சப்பூவும் அன்னப் பறவையின் சிறகும் ஆகிய இரண்டும் மாதர் அடிகளுக்கு நெருஞ்சிப் பழத்தினைப் போல வருத்தம் செய்யும்.
தமிழ்க்குழவி உரை:
மென்மையான அனிச்சமலரும் மெல்லிய அன்னத்தில் தூவியும் ஒப்பிட்டு நோக்கின் என் காதலியின் பாதங்களுக்கு அவை நெருஞ்சிமுட்கள்.
Translation
The flower of the sensitive plant, and the down on the swan's white breast, As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.
Explanation
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.
Transliteration
Anichchamum Annaththin Thooviyum Maadhar Atikku Nerunjip Pazham

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1120