|
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறுவாய் நிறைத்த அவிர்மதிக்குப் போல - முன் குறைந்தவிடம் நிரம்பிய விளங்கும் மதியத்திற்குப்போல ; மாதர் முகத்து மறு உண்டோ - இப்பெண்ணின் முகத்தில் ஏதேனுங்களங்க முண்டோ ? இல்லையே ! அங்ஙனமிருந்தும் அவ்விண்மீன்கள் வேறுபாடறியாது கலங்கித் திரிவானேன் ? அறுவாய் கரும்பக்கம் , மதியம் முழுநிலா , தேய்தலும் வளர்தலுந் தோன்ற ' அறுவாய் நிறைந்த ' என்றான் . தேய்வுவளர்ச்சிகளும் மறுவுடைமையும் வேறுபாடறிவிக்கவும் , அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு .
|
|
கலைஞர் உரை:
|
|
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிரகாசத்தில் பெரும்பாலான நாட்களில் மூளியாகவே இருப்பதும், பூரணமாக இருக்கிற நாளிலும் நடுவில் களங்கமுள்ளதாக இருப்பதும் சந்திரனுக்கு உண்டு. ஆனால் பெண்ணின் முகம் அப்படிப்பட்டதன்று.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இடம் குறைந்து பின்பு நிரம்பி விளங்கும் சந்திரனைப் போல இம்மாதின் முகத்தில் மறுவுண்டோ?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறையாய் இருந்து வளர்கின்ற போதும் கறைகள் உண்டு நிலவுக்கு. என் காதலியின் முகத்தில் எந்த களங்கமும் இல்லையே.
|
|
Translation
|
|
In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here?.
|
|
Explanation
|
|
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.
|
|
Transliteration
|
|
Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|