Thirukural

மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்.

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன. (ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.)
மணக்குடவர் உரை:
மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள். மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இரவுக் குறிக்கண் நிலாவைக் கண்டு சொல்லியது ) மீன் - விண்மீன்கள் ; மதியும் மடந்தை முகனும் அறியா - தம் தலைமைச் சுடராகிய மதிக்கும் எம் காதலி முகத்திற்கும் வேறுபாடு பெரிதாயிருந்தும் அதனை அறிய மாட்டாது ; பதியின் கலங்கிய - மயங்கித் தம் நிலையினின்றும் பெயர்ந்து அங்குமிங்குந் திரிகின்றன . இரவுக்குறியாவது , பாங்கியிற் கூட்டக் காலத்தில் தலைமகனுந் தலைமகளும் இரவிற் கூடுதற்குக் குறித்த இடம் . ஒரிடத்து நிலைத்து நில்லாது எப்போதும் இயங்குதல்பற்றிப் ' பதியிற் கலங்கிய ' என்றான் . இதற்கு மதிமுக வேறுபாடறியாமைக் கரணியங் காட்டியது தற்குறிப் பேற்றம் . இக்குறட்கு "இனி இரண்டனையும் பதியிற்கலங்காத மீன்களறியு மல்லது கலங்கின மீன்களறியாவென்றுரைப்பினு மமையும் ". என்று பரிமேலழகர் கூறிய மற்றோருரை அத்துணைச் சிறந்ததன்று .
கலைஞர் உரை:
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சந்திரனுக்கும் இந்தப் பெண்ணின் முகத்துக்கும் வேற்றுமை அறிந்துகொள்ள முடியாமல் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் தாம் இருக்க வேண்டிய இடத்தைவிட்டு மாறிவிட்டோமோ என்று குழப்பமடைந்தன.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
விண்மீன்கள், சந்திரனுக்கும் எம்மடந்தைக்கும் வேறுபாட்டினை அறிய முடியாமல் தம் இடத்திலிருந்து கலங்கித் திரிகின்றன.
தமிழ்க்குழவி உரை:
வானின் மீன்கள் நிலவெது, என் காதலியின் முகம் எது என்று அறிய முடியாத கலக்கத்தில் அலைந்து கொண்டிருக்கின்றனவோ?
Translation
The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears.
Explanation
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.
Transliteration
Madhiyum Matandhai Mukanum Ariyaa Padhiyin Kalangiya Meen

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1116