|
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-எத்துணப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத்தீவினைகள் நீங்கும் கழுவாய் ( பிராயச் சித்தம்) உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கோ தப்பும் வழியே இல்லை.
பேரறக் கெடுப்புகளாவன, ஆவின் மடியறுத்தலும் குழவிகளையும் நிறை சூலியரையும் தூய துறவியரையுங் கொல்லுதலும், ஊருண்ணுங் கிணற்றில் நஞ்சிடுதலும், இவை போல்வன பிறவுமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த
உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(துன்பக் காலத்தில் அவன் செய்த நன்றிக்காகப் பின்னாள் செய்த துன்பத்தை முற்றும் மறந்துவிட முடியாவிட்டாலும் அவனுக்குத் திருப்பித்துன்பம் செய்யாமலாவது இருக்க வேண்டும். ஏன் எனில்) எந்த நன்மையை அழித்துவிட்டவனுக்கும் அதனாலுண்டாகும் தீவினை யிலிருந்துதப்பித்துக்கொள்ள வழியுண்டு. ஆனால் துன்பக் காலத்தில் செய்த உதவியை அழித்து, உதவி செய்தவனுக்குத் தீமை செய்வோனுக்குத் தப்பித்துக்கொள்ள மார்க்கம் இல்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கடமையாகச் செய்ய வேண்டுவனவாகிய அவ்வித நன்மையினைக் கெடுத்தவர்க்கும் தப்பிக்கும் வழியுண்டு. ஆனால், பிறர் செய்த நன்மையினைக் கெடுத்தவர்க்கு அத்தீமையினின்றும் தப்பிக்கும் வழியே இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வாழ்வில் எந்த நலனைச் சிதைப்பினும் உய்வுண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்துவிடுபவர்க்கு என்றும் உய்வில்லை.
|
|
Translation
|
|
Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!.
|
|
Explanation
|
|
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
|
|
Transliteration
|
|
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|