|
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கொன்ற அன்ன இன்னா செயினும்-தமக்கு முன் பொருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்றபெருந் தீமைகளைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்-அவையெல்லாம் அவர் செய்த நன்மை யொன்றையே நினைத்த மட்டில் நன்றியறிவுடையார் மனத்தில் இல்லாமல் மறைந்துபோம்.
இஃது உண்மையான அல்லது தலையாய நன்றியறிவுடையார் செயலாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப்
புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர்
நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஒருவன் கொலை செய்துவிடுவதைப் போன்ற துன்பத்தைச் செய்துவிட்டாலும் அவன் முன் நம்முடைய துன்பக் காலத்தில் உதவி செய்த அந்த ஒன்றை நினைத்துப் பார்த்தால் இப்போது அவன் செய்த துன்பங்கள் மறைந்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கொல்லுதலைப் போன்றதொரு தீமையினை ஒருவர் செய்தாலும், முன்பு அவர் செய்த நன்மையொன்றினை நினைத்துப் பார்க்க அத்தீமையெல்லாம் கெடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு நாள் நன்மை செய்தவர் பின்னர் கொன்றாற் போன்று கொடுமை செய்திடினும் அவர்செய்த உதவியை எண்ணிப் பார்க்க உள்ளம் ஆறுதல் பெறும்.
|
|
Translation
|
|
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.
|
|
Explanation
|
|
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
|
|
Transliteration
|
|
Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|