Thirukural

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.)
மணக்குடவர் உரை:
கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
இதுவுமது கூற்றமோ - என்னைக் கொல்வதுபோல வருத்துவதாற் காலனோ; பிணையோ - இடையிடை மருண்டு பார்ப்பதாற் பெண்மானோ; கண்ணோ - இவ்விரு தன்மையும் இல்லாது சில வேளைகளிலிருப்பதால் இயல்பான மாந்தக்கண்தானோ; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இப்பெண்ணின் பார்வை இம்மூவகைத் தன்மையும் உடையதாயிருக்கின்றது. மேற்கூறிய கொல்லுத் தன்மையோடு வேறிரு தன்மைகளும் உடைமை இங்குக் கூறப்பட்டது. 'கூற்றம்' 'கண்' 'பிணை' என்னும் மூன்றும் ஆகு பொருளன. 'மடவரல்' ஆகுபெயர். இதில் வந்துள்ள அணி ஐயவுவமை.
கலைஞர் உரை:
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.
சாலமன் பாப்பையா உரை:
என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
எமனைப்போல உயிரை வதைக்கிற தன்மையும், சாதாரணக் கண்ணின் இனிமையும், பெண்மான் மருள்வதைப் போன்ற தன்மையும் ஆகிய இந்த மூன்றும் கலந்ததாக இருக்கிறது (இவள் பார்வை).
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கூற்றுவன்தானோ? பெண்ணின் கண்கள் தானோ? மானோ, யாதென்று அறிய முடியாதவனானேன். இப்பெண்ணின் கண்களின் நோக்கம் இம்முறை தன்மையினையும் உடையதாக இருக்கின்றது.
தமிழ்க்குழவி உரை:
உயிர்பறிக்கும் கூற்றோ, ஒளிகூட்டும் கண்ணோ, ஓடுகின்ற பெண்மானோ, இவள் பார்வையில் இம்மூன்று தன்மைகளையும் காண்கிறேன்.
Translation
The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams? Or fawn's shy glance? All three appear In form of maiden here.
Explanation
Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?.
Transliteration
Kootramo Kanno Pinaiyo Matavaral Nokkamim Moondrum Utaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1085