|
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன. (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண்டன்மையுடைய இப்பேதைமையாளுக் குள்ள கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டவரைக் கொல்லும் தோற்றத்துடன் கூடிக் கொடியனவா யிருந்தன. இனி அமர்த்தல் மாறுபடுதல் என்றுகொண்டு கண்கள் பெண்டன்மையொடும் பேதைன்மையொடும் பொருந்தாது மாறுபட்டிருந்தன எனினுமாம். 'கண்' பால்பகா அஃறிணைப்பெயர் பேதையென்னுஞ்சொல் இங்குப் பருவங்குறியாது இளமை குறித்து நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பார்க்கிறவர்களுடைய உயிரைக் கவர்ந்துவிடுகிற காரணத்தால் அழகு நிறைந்த இந்தக் களங்கமற்ற பெண்ணுக்குக் கண்கள்மட்டும் அவளுடைய நல்ல இயல்புக்கு விரோதமான சுபாவமுள்ளனவாக இருக்கின்றனவே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பெண் தன்மையுடன் கூடிய இப்போதைக்கு இருக்கும் கண்கள், தம்மைக் கண்டவர் உயிரை உண்ணுகிற தோற்றத்துடனே கூடி பெண் தன்மைக்கு மாறுபட்டிருந்தன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் உடையதாக இருப்பதால் இளமை சான்ற இவள் கண்கள் கொடுங்கூற்றாக உள்ளனவோ?
|
|
Translation
|
|
In sweet simplicity, A woman's gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife!.
|
|
Explanation
|
|
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.
|
|
Transliteration
|
|
Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip
Pedhaikku Amarththana Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|