Thirukural

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்றுஇரப்பவர் மேற்கொள் வது.

ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.
தேவநேயப் பாவாணர் உரை:
கண்நின்று இரப்பவர் மேற்கொள்வது-வாய் திறந்து இளிவந்த சொல்லைச் சொல்லமாட்டாது ஒருவருக்கு முன் நிற்கும் நிலையினாலேயே இரக்கும் மானியர், தம் உயிரோம்பும் பொருட்டு இரத்தலை மேற்கொள்வது; கரப்பு இலார் வையகத்து உண்மையான்-தம்மிடத்துள்ள பொருளைக் கரவாது ஈயும் ஒருசிலர் உலகத்து இருப்பதனாலேயே. அத்தகையார் இல்லையெனின், தன்மானமுள்ள இரப்போரும் இறப்பர் என்பதாம்.
கலைஞர் உரை:
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.
சாலமன் பாப்பையா உரை:
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
இல்லையென்னாமல் கொடுப்பவர்கள் உலகத்தில் இருப்பதனால்தான் பிச்சை கேட்பவர்கள் ஆலோசனையில்லாமல் எல்லாரிடத்திலும் பிச்சை கேட்டுவிடுகிறார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உள்ளதை மறைக்காமல் கொடுப்பவர்கள் சிலர் உலகத்தில் இருந்து வருவதால்தான், முன்னின்ற மாத்திரத்தில் யாசிப்பவர் உயிர் காத்தற் பொருட்டு இரத்தலை மேற்கொண்டுள்ளார்கள்.
தமிழ்க்குழவி உரை:
உள்ளதை மறைக்காமல் உவந்தீயும் தன்மை உள்ளவர்கள் உலகத்தில் இருப்பதால் தான் ஏதும் இல்லாதோர் இரத்தலை மேற்கொள்கின்றனர்.
Translation
Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray.
Explanation
As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.
Transliteration
Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru Irappavar Merkol Vadhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1055