|
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கனவிலும் கரத்தல் தேற்றாதார் மாட்டு-தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; இரத்தலும் ஈதலே போலும்-ஒன்றை யிரத்தலும் வறியார்க் கொன்றீதலே போலும்! இரந்த பொருள் இழிவுந் துன்பமுமின்றி வருதலாலும், ஈவோனுக்குப் புகழைக் கொடுத்தலாலும், ’இரத்தலும் ஈதலே போலும்’ என்றார். உம்மை யிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது எச்சம். ஏகாரம் ஈற்றசை.
|
|
கலைஞர் உரை:
|
|
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வைத்துக்கொண்டே கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லுவதைக் கனவிலும் அறியாதவர்களிடத்தில், ஒருவன் சென்று தானம் கேட்பதை, (அவர்கள் அவன் தமக்குப் புண்ணியத்தைத் தானம்) கொடுக்க வந்ததாகவே வரவேற்பார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்மிடம் இருப்பதைக்கனவிலும் மறைத்தலை அறியாதாரிடம் சென்று ஒன்றனை யாசித்தல், வறியவர்கள் ஈதலே போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உள்ளதை மறைப்பதைக் கனவில் கூட நினையாதார். மாட்டு, இரந்து நிற்பதும் ஈதல் போல் பெருமை உடையதே.
|
|
Translation
|
|
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.
|
|
Explanation
|
|
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).
|
|
Transliteration
|
|
Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|