Thirukural

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)
மணக்குடவர் உரை:
இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
நெருநலும் கொன்றதுபோலும் நிரப்பு-நேற்றும் வந்து என்னைக் கொன்றதுபோலும் துன்புறுத்திய வறுமை; இன்றும் வருவது கொல்-இன்றும் வருமோ? வந்தால் ஐயோ! நான் என் செய்வேன்! இதுமுந்தின நாள் அரும்பாடுபட்டுத் தன் வயிற்றை நிரப்பிய ஓர் இரப்போனின் இரங்கற் கூற்று. உம்மைகள் முறையே இறந்ததும் எதிரதும் தழுவிய எச்சம். ’கொல்’ ஐயம். ’ஓ’ இரங்கலிடைச்சொல். ’நிரப்பு’ மங்கல வழக்கு.
கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படி நீங்காத நித்திய தரித்திரம் உள்ளவனுக்கு ஒருநாள் போவது ஒரு மலையாக இருக்கும். அவன் தினந்தினம் எப்படி நடுங்குவானென்றால்) நேற்று வந்து என்னைக் கொன்று விடுவது போலத் துன்பப்படுத்திய தரித்திரம் இன்றைக்கும் வந்து விடுமோ (என்று ஏங்குவான்.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நேற்றும் கொன்றதைப் போன்று துன்பத்தினைச் செய்த நல்குரவு இன்றும் என்பால் வருகின்றதோ? வந்தால் யாது செய்வேன்.
தமிழ்க்குழவி உரை:
நேற்று வந்து கொல்வது போலும் துயர் தந்த வறுமை இன்றும் தங்கி இருந்து துன்பம் நல்குமோ?
Translation
And will it come today as yesterday, The grief of want that eats my soul away?.
Explanation
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.
Transliteration
Indrum Varuvadhu Kollo Nerunalum Kondradhu Polum Nirappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1048