|
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது-ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது. நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.
|
|
கலைஞர் உரை:
|
|
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவனுக்கு நிம்மதியே இருக்காது.) நெருப்பின் மத்தியில் இருந்துகொண்டுகூடத் தூங்கிவிடலாம்; ஆனால் தரித்திரத்தில் இருந்துகொண்டு துளிகூடத் தூங்க முடியாது,
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு நெருப்பின்மேல் படுத்துத்தூங்குதலும் முடியும்; வறுமை வந்துவிட்டபோது யாதொன்றினாலும் தூங்குதல் முடியாததாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நெருப்பினும் கூடப் படுத்துத் துயிலலாம், ஆனால் வறுமை என்னும் துன்பம் நேர்ந்தால் கண்கள் கூட மூட இயலாது.
|
|
Translation
|
|
Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.
|
|
Explanation
|
|
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
|
|
Transliteration
|
|
Neruppinul Thunjalum Aakum Nirappinul
Yaadhondrum Kanpaatu Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|