|
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பயன் தூக்கார் செய்த வுதவி நயன் தூக்கின்- இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த வுதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின்; நன்மை கடலின் பெரிது- அதன் நன்மை கடலினும் பெரியதாம்.
காலத்தினாற் செய்த நன்றி பயன்தூக்கியதாகவு மிருக்கலா மாதலால், பயன் தூக்காது செய்த வுதவியும் ஒருவகையிற் பெரியதே யென்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின்
காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிரதிப் பிரயோசனத்தைக் கருதாமல் செய்கிற உதவியிலுள்ள அன்பை அளக்கப்போனால் அது கடலைவிடப் பெரியதாக, அளக்க முடியாததாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்குத் திரும்பி வருகின்ற பயனைக் கருதாமல் ஒருவன் செய்த உதவியினை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலையும் விடப் பெரிதானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எந்தப் பலனையும் எதிர்நோக்காது ஒருவர் செய்யும் உதவியின் தன்மையை எண்ணிப்பார்ப்பின் அதன் நன்மை கடலினும் பெரியதாகும்.
|
|
Translation
|
|
Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea.
|
|
Explanation
|
|
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
|
|
Transliteration
|
|
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|