|
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர்.
பனையளவு- அதனுயர்ச்சி
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தினைத்துணை நன்றி செயினும்- தினையளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானாயினும்; பயன் தெரிவார் பனைத் துணையாக் கொள்வர்- அதன் பயனளவை யறிந்தவர் அதைப் பனையளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.
'தினை' 'பனை' என்னும் நிலைத்திணைப் பெயர்கள் இங்குச் சிறுமை பெருமை குறிக்கும் அளவைப் பெயர்களாக வந்தன, 'உம்மை' இழிவு சிறப்பு. ஒருவர் செய்த வுதவியைப் பொருளளவிலும் முயற்சியளவிலும் நோக்காது பயனளவில் நோக்க வேண்டு மென்பது, இங்குக் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும்
நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக்
கருதுவார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உதவியின் பயனை உணரக்கூடியவர்கள், ஒருவர் தமக்குச் செய்த உதவி தினையளவு சிறியதானாலும் அதைப் பனையளவாக உயர்த்திப் பாராட்டுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தினையளவினதாகிய நன்மையினைச் செய்தாலும் அதனைப் பனையளவினதாகக் கொள்ளுவார்கள். யாரென்றால், அக்கருத்தின் பயனையறிந்தவர்கள் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தினையளவே ஒருவர் நன்மை செய்யினும் அதனால் விளைந்த பயனை எண்ணிப் பார்ப்பவர் அதனைப் பனையளவாகக் கருதிப் போற்றுவர்.
|
|
Translation
|
|
Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.
|
|
Explanation
|
|
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.
|
|
Transliteration
|
|
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|