Thirukural

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)
மணக்குடவர் உரை:
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம். ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.
கலைஞர் உரை:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யப்பட்ட சமய சந்தர்ப்பத்தை ஒட்டி அதை இந்த உலகத்தை விடப் பெரிதாக மதிக்கவேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் காலமறிந்து அறிய காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அக்காலத்தினை நோக்க அது இவ்வுலகத்தினையும் விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.
தமிழ்க்குழவி உரை:
உரிய நேரத்தில் ஒருவர் செய்யும் உதவி அளவில் சிறியதாயினும் அதன் பயனை எண்ணிப் பார்க்கின் இவ்வுலகிலும் பெரியதாகும்.
Translation
A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth.
Explanation
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
Transliteration
Kaalaththi Naarseydha Nandri Siridheninum Gnaalaththin Maanap Peridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 102