Thirukural

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.

தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு-தம் குடியை யுயர்த்துதற்கேற்ற வினையைத் தவக்கமின்றி முயல்வார்க்கு; சூழாமல்தானே முடிவு எய்தும் -அம்முயற்சி அதற்கேற்ற சூழ்வினை வேண்டாது தானாகவே வெற்றியாக முடியும். தெய்வத்துணை யிருத்தலால், விரைந்த முயற்சி மட்டுமிருப்பின் எளிதாய் முடியும் என்பதாம். ’குடி’ ஆகுபொருளது.
கலைஞர் உரை:
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த நம்பிக்கையுடன்) தம்முடைய குடித்தனத்தின் உயர்வுக்கான முயற்சிகளைத் தளராமல் செய்துகொண்டேயிருப் பவர்களுக்கு அந்த நோக்கம் தடையின்றித் தானாகவே பூர்த்தியாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன் குடிமக்கள் உயரும் செயல்களைக் காலம் தாழ்த்தாமல் விரைந்து முயல்கின்றவர்களுக்கு, செயலினை முடிக்க ஆலோசிக்காமலேயே அத்தொழில் தானாகவே முடிவுறும் என்பதாகும்.
தமிழ்க்குழவி உரை:
தன்குடியைத் தாங்குவதற்காக தளராமல் உழைப்பவர்களுக்கு இயல்பாகவே வெற்றி முன்வந்து நிற்கும்.
Translation
Who labours for his race with unremitting pain, Without a thought spontaneously, his end will gain.
Explanation
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.
Transliteration
Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith Thaazhaadhu Ugnatru Pavarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1024