|
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செய்யாமல் செய்த உதவிக்கு -- தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; வையகமும் வானகமும் வானகமும் ஆற்றல் அரிது - ' மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது .
கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும் , முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து .
செய்யாமைச் செய்தவுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ள விடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப்பொருள்,
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு"
(211)
என்னுங் குறளாற் பெறப்படுதலால்.
|
|
கலைஞர் உரை:
|
|
"வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி"
என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும்
பூமியும் கூட ஈடாக மாட்டா.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நம்மிடத்தில் ஓர் உதவியும் முன்னால் பெறாதவராக இருந்தும் தக்க சமயத்தில் ஒருவர் நமக்குத் தாமாகவே செய்கிற உதவிக்கு ஈடாக மண்ணுலகம், விண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் போதாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர்க்கு நாம் எந்த உதவியையும் செய்யாதபோது அவர் முன் வந்து நமக்குச் செய்யும் உதவிக்கு இந்த வையகமும் வானகமுமே ஈடாகாது.
|
|
Translation
|
|
Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.
|
|
Explanation
|
|
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.
|
|
Transliteration
|
|
Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|