Thirukural

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்.

நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார். (பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள், 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.
தேவநேயப் பாவாணர் உரை:
மேலாயவர்- உயர்ந்தோர்; வேலி நாண் கொள்ளாது- தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் கொள்வதன்றி; வியன்ஞாலம் பேணலர்- பரந்த ஞாலத்தைக் கைப்பற்ற விரும்பார். நாணும் ஞாலமுமாகிய இரண்டிலொன்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைமை நேர்ந்த விடத்து, ஞாலத்தையே தெரிந்துகொள்வர் என்பதாம். பழி பளகு, நேராமற் காத்தலின் நாணை 'வேலி' என்றார்.மன்னும் ஓவும் அசை. என்றார் பரிமேலழகர்.முற்காலத்தில் ' மன்னோ' என்பது ஆடூஉ முன்னிலையாயிருந்தமை முன்னரே 990-ஆம் குறளுரையிற் கூறப்பட்டது.நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார் என்னும் உரை, முரண்பாடு கொள்ளுதலின் பொருந்தாது.
கலைஞர் உரை:
பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப்பட்ட) மேன்மக்கள் தம்முடைய சான்றாண் மைக்குப் பாதுகாப்பாகிய நாணுடைமையை விட்டுவிட்டு இந்தப் பெரிய உலகமே தமக்குக் கிடைப்பதானாலும் விரும்ப மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உயர்ந்த மக்கள் தமக்குப் பாதுகாப்பாக நாணத்தினைக் கொள்ளுவதல்லாமல் அகன்ற ஞாலத்தினைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
மேன்மக்கள் எப்போதும் நாணமுறுதலை, பழிக்கஞ்சும் பண்பை தம் வாழ்விற்கு வேலியாகக் கொள்வர், அதைத் தவிர்த்து உலகே பெறினும் விரும்பார்.
Translation
Unless the hedge of shame inviolate remain, For men of lofty soul the earth's vast realms no charms retain.
Explanation
The great make modesty their barrier (of defence) and not the wide world.
Transliteration
Naanveli Kollaadhu Manno Viyangnaalam Penalar Melaa Yavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1016