|
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சான்றோர்க்கு நாண் உடைமை அணி அன்றோ-அறிவு நிறைந்தோர்க்கு நாணுடைமை ஓர் அணிகலமே; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வணிகல மில்லையாயின் அவரது பெருமித நடை அவருக்கொரு நோயேயாம். அணிசெய்வதை 'அணி' யென்றும் , இயல்பிற்கு மாறானதைப் 'பிணி' யென்றும் கூறினார்; எதிர்மறையடுத்த ஓகார வினாக்கள் ஓசை வேறுபட்டால் உடன்பாட்டுப் பொருள் தந்து அதைத் தேற்றஞ் செய்தன. இக்குறளின் பிற்பகுதிக்கு, "அவ்வாபரண மில்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்...பொறுத்தற் கருமையிற் 'பிணி'யென்றுங் கூறினார்". என்பது பரிமேலழகருரை.இம் முக்குறளாலும் நாணுடைமையின் சிறப்புக் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாணம் இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மனிதருக்கு அழகு பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்கும் நாணுடைமையல்லவா? அது இல்லாத மனிதன் எவ்வளவு சிறப்பான வாழ்க்கை நடத்தினாலும் அவன் சான்றோரால் வெறுக்கப்படுவான் அல்லவா?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சான்றோர்களுக்கு நாணுடைமை என்பது ஆபரணமாகும். அந்த ஆபரணம் இல்லையானால், அவருடைய பெருந்தன்மையான நடை கண்டார்க்குப்பிணியாவதொன்றாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நாணுடைமையே ஒருவர் வாழ்விற்கு அழகாகும். அஃது இல்லையேல், அவர்களுடைய பெருமிதம்மிக்க நடைமுறை நோய் வாய்ப்பட்டதென அமையும்.
|
|
Translation
|
|
And is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see.
|
|
Explanation
|
|
The Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).
|
|
Transliteration
|
|
Aniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel
Piniandro Peetu Natai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|