|
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.
|
|
மணக்குடவர் உரை:
|
|
பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப்பற்றும்; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது- அதுபோலச் சான்றாண்மை நாண் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப் பற்றும். உயிர் உடம்பொடு கூடியல்லது வாழாதது போல, சால்பு நாணோடு கூடியல்லது நடவாது என்பதாம். 'ஊன்' ஆகுபெயர். ' உடம்பு' வகுப்பொருமை. 'நன்மை' ஆகுபொருளது. 'ஊனை' என்று பாடங் கொள்வர் மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர்.
|
|
கலைஞர் உரை:
|
|
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(இந்த நாணுடைமைக் குணம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒருவன் சான்றாண்மை என்ற நிறை குணம் உள்ளவனாகிறான்.) உயிர்களெல்லாம் உடம்பை ஆதாரமாகக் கொண்டு இயங்குவன. சான்றாண்மை என்ற பெருங்குணம் பழிக்கஞ்சும் நாணுடைமை என்ற நற்குணத்தை ஆதாரமாகக் கொண்டது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக்கொண்டு அதை விடாதிருப்பனவாகும். அது போல சால்பு என்ற உயர்ந்த தன்மை நாணம் என்பதனை நிலைக்களனாகக் கொண்டு அதனைவிடாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உடம்பைக் கருவியாகக் கொண்டே உயிர்களெல்லாம் இயங்குகின்றன. நாணுடைமை பண்பை அடிப்படையாகக் கொண்டு சான்றாண்மை பேசப்படுகிறது.
|
|
Translation
|
|
All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.
|
|
Explanation
|
|
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.
|
|
Transliteration
|
|
Oonaik Kuriththa Uyirellaam Naanennum
Nanmai Kuriththadhu Saalpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|