|
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கொடுப்பதும் துய்ப்பதும் இல்லார்க்கு -பிறருக்கீவதும் தாம் நுகர்வது மாகிய இரண்டுமில்லாதவருக்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல்-கோடிக் கணக்கான செல்வமிருப்பினும் அது செல்வமிருப்பதாகாது. செல்வத்தின் இரு பயனுமின்மையால் ' இல் ' என்றார். இன்பத்தினும் அறஞ் சிறந்தமையால் முற்கூறப்பட்டது. ' கோடி' அளவையாகு பெயர். ' கொடுப்பதூஉம் ' , ' துய்ப்பதூஉம் ' இன்னிசை யளபெடைகள்.உம்மை உயர்வு சிறப்பு. "எனதென தென்றிருக்கு மேழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின் தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் யானு மதனை யது" (நாலடி.276) என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.
|
|
கலைஞர் உரை:
|
|
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) பிறருக்குக் கொடுப்பது, தாம் அனுபவிப்பது ஆகிய இரண்டும் இல்லாதவர்கள் கோடி கோடியாகச் செல்வத்தைச் சேர்த்து வைத்தாலும் அவர்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறர்க்கு ஈகை செய்வதும் தாம் நுகர்வதும் ஆகிய இரண்டு செய்கையும் இல்லாதவர்களுக்கும் பலவாக அடுக்கிய கோடிப் பொருள உண்டாயினும் பயன் ஒன்றும் இல்லையாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறர்க்குக் கொடுத்து உதவாமலும் தானும் உண்டு மகிழாமலும் இருப்பார்க்கு பலகோடி செல்வம் இருந்தும் என்ன பயன்?
|
|
Translation
|
|
Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.
|
|
Explanation
|
|
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
|
|
Transliteration
|
|
Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya
Kotiyun Taayinum Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|